மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடிவரும் நிலையில், ‘உயிர்தெழுந்து வாருங்கள் அம்மா’ என்று அக்கட்சியின் எம்.பி. மைத்ரேயன் உருகியுள்ளார்.

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் மைத்ரேயன், ஜெயலலிதாவுடனான தனது பழைய நிகழ்வுகளையும், அவர் தனக்கு அளித்த வாய்ப்புகள் பற்றியும் நினைவுகூர்த்து எழுதியுள்ளார். “அம்மா! 22 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை முதன்முதலாகச் சந்தித்தேன். 19 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் தலைமையை ஏற்று கழகத்தில் இணைந்தேன். இன்று நீங்கள் மறைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இல்லாத வெறுமையை உணர்கிறேன். 

நான் தமிழகத்தில் சிறுபான்மையான சமுதாயத்தை சேர்ந்தவனானாலும், எனக்கென்று பெரிய பின்புலம் இல்லையென்றாலும் உங்கள் மீதான எனது விசுவாசத்தை நீங்கள் நன்கு அறிந்தவர். அந்த விசுவாசம்தான் எனது ஒரே சொத்து. அதனால்தான் நீங்கள் எனக்கு கழக மருத்துவ அணித்தலைவர் பொறுப்பு கொடுத்து தலைமைக்கழக நிர்வாகி அங்கீகாரம் அளித்தீர்கள். அதோடு கழகத்தில் வேறு எவருக்கும் கிடைக்காத பேறாக மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி எனக்கு தேசிய அளவில் நாடறிந்த முகவரி அளித்தீர்கள். 

வாஜ்பாய், அத்வானி, மன்மோகன் சிங், பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன், முலாயம் சிங் யாதவ், மாயாவதி, சரத் பவார், நரேந்திரமோடி, அருண் ஜெட்லி என்று அனைத்து தேசியத் தலைவர்களும் என்னை உங்கள் பிரதிநிதியாகத்தான் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் என் சட்டைப்பையில் எப்போதும் இருக்கும் உங்கள் புகைப்படம் பற்றி சிலாகிப்பார்கள். 

அனைத்துக்கும் மேலாக நீங்கள் என் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, நான் பெற்ற பெரும் பாக்கியம். உங்களுக்கு 71 வது பிறந்தநாள். என்னை வழக்கம் போல் வாழ்த்துங்கள் அம்மா. இயேசுபிரான் மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தார் என்று எனது கிருஸ்துவ நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். மூன்றாம் ஆண்டில் நீங்கள் உயிர்த்து எழுந்து வாருங்கள் அம்மா. இவ்வாறு மைத்ரேயன் எழுதியுள்ளார்.