முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் தமிழக சட்டப்பேரவையில் மோதல் ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து பிரேமலதா விளக்கமளித்துள்ளார். பிரச்சாரத்தின் பழைய பிரச்சனைகளை பிரேமலதா கிளற துவங்கியுள்ளதால், அக்கட்சி வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடம் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது திமுக என்பதே இல்லாமல் போய்விட்டது. கூட்டணியில் போட்டியிட்ட நாங்கள் தான் எதிர்க்கட்சியாக இருந்தோம். சட்டப்பேரவையில் 2012-ம் ஆண்டு பால், மின்சார கட்டண உயர்வு குறித்து, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னையை எழுப்பினர். யாரால் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது என்றும் பேச்சு எழுந்தது. 

சட்டப்பேரவயைில் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜெயலலிதா, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்ததற்கு வருத்தப்படுகிறேன். இனி, அந்த கட்சியுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது. பெற வேண்டிய ஏற்றங்களை, தே.மு.தி.க. என்னால் பெற்று விட்டது. இனி அந்த கட்சிக்கு இறங்குமுகம் தான்' என்று ஜெயலிலதா கூறினார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. கூட்டணி தொடர்பாக, ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே ஏற்பட்ட மோதல்களை, இரண்டு கட்சியினரும் மறக்க விரும்புகின்றனர். இக்கட்டான நேரத்தில், வெற்றியை மட்டுமே, இரு தரப்பும் எதிர்பார்க்கிறது.

இந்நிலையில் பிரசாரம் என்ற பெயரில், பழைய பிரச்னைகளை, பிரேமலதா கிளறத் துவங்கியுள்ளார். இதனால், தே.மு.தி.க., வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.