Jayalalitha Video is Fake! DMK doubt!

அப்போலோ மருத்துவமைனை CCU வார்டுக்கு அருகே தென்னை மரங்கள் கிடையாது என்றும் ஜன்னலுக்கு திரைச்சீலைகள் உண்டு என்றும் ஜெ. வீடியோ போலியானது என்று திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம்
தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த நிலையில், சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஜெயலலிதா, பழச்சாறு அருந்தும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா பழச்சாறு அருந்தியவாறு டிவி பார்த்துக் கொண்டிருப்பது வீடியோவில் வெளியாகி உள்ளது. 20 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோவை டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது.

தினகரன் தரப்பு வெளியிட்டுள்ள இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என்றும், இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் கூறி வருகிறது.

அமைச்சர் ஜெயக்குமார், இந்த வீடியோ வெளியிட்டதற்கு இப்போதைய அவசியம் என்ன? அப்படி ஒரு வீடியோ இருந்திருந்தால், அதனை விசாரணை ஆணையிடம் மட்டுமே கொடுத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்ப இருந்தார்.

வெற்றிவேல் வெளியிட்ட இந்த விடியோ குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சி சித்தரிக்கப்பட்டு, ஊடகத்தில் உலா வருவதை கண்டேன் என்றும், இதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றும் கூறியுள்ளார். இதில் சந்தேகங்கள் எழுவதாகவும் அவர் கூறினார்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அதே CCU வார்டில்தான் என் மனைவியும் அனுமதிக்கப்பட்டிருந்தார். லண்டன் மருத்துவர் பீலேவைத் தவிர, அதே மருத்துவக் குழு சார்ந்த சில மருத்துவர்கள்தான், என் மனைவிக்கும் சிகிச்சை அளித்தது. நானும் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளேன். ஜன்னல் திரைச்சீலைகள் உண்டு. ஜன்னல் வழியே தென்னை மரங்கள் தெரிகின்ற. அப்போலோ CCU-வுக்கு வெளியே தென்னை மரங்கள் கிடையாது. இது தவறான காணொளி காட்சியா? என சந்தேகங்கள் ஏற்படுவதாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.