தலைவர்னா இப்படி இருக்கணும்.. ஜெயலலிதா பாணியில் குட்டி சம்பவத்தை சொன்ன ஜெ.உதவியாளர்..!
தலைமை ஏற்பவர்கள் முதலில் மரணத்தை நோக்கி முன்வர வேண்டும் இல்லையென்றால் எஞ்சிய படைவீரர்களும் முழுமனதுடன் போரில் ஈடுபட முன்வர மாட்டார்கள்'' என்று பதில் கூறினார்.
ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஜெயலலிதா பாணியில் தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வரலாற்று சம்பவத்தை சொல்லி குட்டி கதையை சொல்லியிருக்கிறார். அவருடைய கருத்து அதிமுகவுக்கு பாடம் சொல்வதை போல் அமைந்துள்ளது.
இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- ஜெனரல் ஸ்ட்ராவ் என்கிற என் ஆங்கிலேய நண்பர் ஒருவர் சிப்பாய்க் கலகத்தின்போது இந்தியாவில் இருந்தார். அவர் சிப்பாய்க் கலகம் பற்றிய பல கதைகளை என்னிடம் கூறுவார். ஒரு நாள் அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இடையில் நான் அவரிடம் கேட்டேன், "சிப்பாய்கள் போதுமான அளவுக்குத் தேர்ச்சி பெற்ற வீரர்களாய் இருக்கிறார்கள். மேலும் அதோடு அவர்களிடம் தேவையான அளவு துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் உணவுப் பொருள்களும் இருந்திருக்கின்றன. அப்படி இருந்தும் அவர்கள் ஏன் படுதோல்வி அடைந்தார்கள்?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்: "சிப்பாய் கலகத்தின் படைத்தலைவர்கள் போரில் தாங்கள் முன்னின்று போரிடுவதற்கு பதிலாக படைக்குப் பின்னால் பாதுகாப்பான ஒரு பகுதியில் இருந்து கொண்டு, "வீரர்களே சண்டையிடுங்கள்' என்று கத்திக் கொண்டிருந்தார்கள். தலைமை ஏற்பவர்கள் முதலில் மரணத்தை நோக்கி முன்வர வேண்டும் இல்லையென்றால் எஞ்சிய படைவீரர்களும் முழுமனதுடன் போரில் ஈடுபட முன்வர மாட்டார்கள்'' என்று பதில் கூறினார்.
"தலைவன் என்பவன் தன் தலையைப் பலி கொடுக்கக் கூடியவனாய் இருக்க வேண்டும். ஓர் லட்சியத்துக்காக நீ உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்கமுடியும். ஆனால் நாம் அனைவரும் தேவையான தியாகம் எதையும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட விரும்புகிறோம். அதன் விளைவு வெறும் பூஜ்ஜியமாய் விடுகின்றது. நாம் சொல்வதை எவரும் கேட்பதில்லை''. அவசரப்பட்டு முழுதும் படிக்காமல், கருத்தை புரிந்து கொள்ளாமல் என்னை திட்டிவிடப் போகிறீர்கள். மேற்சொன்னவற்றை நான் சொல்லவில்லை. சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். நீங்க அவரையே திட்டினாலும் திட்டுவீங்கப்பா என உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில், கட்சி கூட்டங்களில் மத்தியில் பேசும் போது தொண்டர்களுக்கு சில விஷயங்களை உணர்த்த வேண்டும் என்றால் குட்டி கதைகளை சொல்வது வழக்கம். அவருடன் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஜெயலலிதா பாணியில் தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வரலாற்று சம்பவத்தை சொல்லி உணர்த்தியிருக்கிறார். மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் தோல்வி அடைந்த அதிமுக அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், அவருடைய கருத்து அதிமுகவுக்கு பாடம் சொல்வதை போல் அமைந்துள்ளது.