முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது.

இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தினர். இதையொட்டி நிகழ்ச்சி முன்னதாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சினிமா பாடல்களை ஒலிபரப்பு, நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்தது.

சுமார் 12 மணியளவில் அங்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், பொதுமக்களுக்கு ஸ்கூட்டி, சைக்கிள், வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆகியவை வழங்கினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், மனேர்ஜ் பாண்டியன், மைத்ரேயன், இ.மதுசூதனன் உள்பட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு தலைவர்களை தேடி மக்கள் செல்ல கூடாது. மக்களின் வீடுகளை தேடி தலைவர்கள் சென்று, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பதை கற்று கொடுத்தவர் ஜெயலலிதா. அவரது செயல்படியே இன்று, அவரது தொகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் தற்போது தர்ம யுத்தம் நடக்கிறது. இந்த தர்மயுத்தத்தில் நாம் வெற்றி பெறுவோம் அது நிச்சயம் நடக்கும்.

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய 3 பேரின் திறமைகளையும், செயல்களையும் ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா. அவரது ஆட்சியும், கட்சியை நடத்திய வழமுறையும் சரித்திரம் சொல்லும். அவர் கட்டி காப்பாற்றிய கட்சியில் குண்டு மணி அளவும் சேதம் வராமல் பார்க்க வேண்டியது நம் கடமை.

எம்ஜிஆர் மறைவுக்கு பின், காணாமல் போகும் என கூறிய கட்சியை 28 ஆண்டுகளாக கட்டி காப்பாற்றி இன்று ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி காட்டியவர் ஜெயலலிதா.

கட்சியும், ஆட்சியும் யாருக்கும் போக கூடாது என, யாரை அவர் வெளியேற்றினாரோ, எப்படி அவர் உறுதியாக இருந்தாரோ அதுஇன்று வேறு மாதிரியாக போய்விட்டது. இன்று அவர்களிடம்தான் கட்சியும் ஆட்சியும் உள்ளது. ஒரு குடும்பத்திடம் கட்சி சென்றுவிட்டது.

ஜெயலலிதாவின் கொள்கைக்கும், கோட்பாடுக்கும் எதிராகவும், மாறாகவும் ஒரு குடும்பமே செயல்படுகிறது. தர்மத்தை சூது கவ்வும். ஆனால், தர்மமே மீண்டும் வெல்லும்.

கடந்த சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் மூசா என்பவர் தீக்குளித்தார். அவரை பார்க்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கிருந்து நான் புறப்பட்டு வெளியே வந்தபோது, ஒரு மூதாட்டி என்னை நோக்கி ஓடி வந்தார்.

அந்த மூதாட்டி என்னிடம், ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருக்கிறது. அதை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பூர்வாங்க பணிகளை நான் மேற்கொண்டேன். அதற்குள், ஆட்சி அதிகாரம் மாறிவிட்டது.

ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஜெயலலிதாவின் மறைவில் உள்ள சந்தேகத்தை தீர்க்க வேண்டும். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழக மக்கள் கேட்டு கொண்டுள்ளனர். நமது தர்மயுத்தம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.