ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது முழு உருவ வெண்கல சிலையை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்துவைத்தனர்.

தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. அதிமுகவில் எம்ஜிஆரின் மறைவுக்குப்பின், பொதுச் செயலாளராக தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாள் விழாவையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அருகில், அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலை சிலை திறக்கப்பட்டது. 

ஜெயலலிதாவின் சிலையை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். இந்த சிலை திறப்பு விழாவில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளேட்டையும் தொடங்கி வைத்தனர்.