முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் விரைவில் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது பிறந்தநாள், நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிமுக சார்பில், கொண்டாடப்படும் இந்த விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, அவருக்கு நினைவிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட திட்டமிட்டனர். ஆனால், உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து அவருக்கு தண்டனை வழங்கியதால், அரசு சார்பில் நினைவிடம் கட்டும் முயற்சி மூடுவிழா கண்டது.

முன்னதாக ஜெயலலிதாவின் உருவ சிலை திறக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று கொண்ட அதிமுக தலைமை, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகிலேயே ஜெ. சிலை நிறுவ முடிவு செய்தது.

உச்சநீதிமன்ற தடைக்கும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை அமைப்பதற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இதனால், சுமார் 9 அடி உயர ஜெயல்லிதாவின் சிலை உருவாக்கப்பட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளை, அந்த சிலை திறக்க திட்டமிட்டனர். ஆனால், அதிமுக பொது செயலாளர் சசிகலா , பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளதால், அவரிடம் ஆலோசனை நடத்திய பிறகு சிலை திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த சிலை திறப்பு விழாவுக்கு, சசிகலாவை பரோலில் அழைத்து வந்து, அவர் கையாலேயே சிலையை திறக்க திட்டமிட்டுள்ளனர்.