மறைந்த முதல்வர் ஜெயலிலதா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யுமான கே.சி. பழனிசாமிக்கு போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. இவர், கடந்த 1989-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தபோது, இவர், ஓ.பி.எஸ். அணியில் இருந்தார். 

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததால் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆனாலும், தனியார் டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்து வந்தார். இது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுமட்டுமில்லாமல், அதிமுக பெயரில் போலி இணையதளம் துவக்கி, கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வந்தார். அதிமுக தலைமை பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து பதிவிட்டு வந்தார்.

இதனையடுத்து, அதிமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கே.சி. பழனிசாமியை கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், வருகிற 24-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவிக்க போலீசில் கே.சி. பழனிசாமி அனுமதி கேட்டிருந்தார். ஆனால், சிலைகளுக்கு மாலை அணிவிக்க கே.சி.பழனிசாமிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.