ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை, தள்ளுபடி செய்தது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்மூலம் பல கோடி சம்பாதித்தார். அவர், கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார்.

முன்னதாக கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்தார்.

மேலும், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன. அந்த சொத்துகளை தனக்கு பின் யார் நிர்வகிப்பார்கள் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. அவருக்கு நேரடி வாரிசும் இல்லை.

எனவே, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஜெயலலிதாவின் சொத்துகளை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையின்படி அவருடைய சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்.

பின்னர் அந்த சொத்துகளை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு நிர்வகித்து, சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழைகளுக்கு செலவிட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிநபர் சொத்துக்கள் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் ரமேஷ், சுய விளம்பரத்துக்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளார் என நீதிமன்றம் எச்சரித்தது.