முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்ப்பட்ட டிச.4 முதல் மறுநாள் அவர் மறைந்தது வரை உள்ள நிகழ்வுகளை மத்திய அரசுக்கு கவர்னர் தெரிவித்துள்ள கடிதம் வெளியாகி உள்ளது. அதில் இரண்டு நாள் நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார்.

 முதல்வர் ஜெயலலிதா பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்தவர் , அவரது மரணமும் பரபரப்பாகவே அமைந்துவிட்டது. முதல்வர்   மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மூன்று வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் உள்ளது. ஒரு வழக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் உள்ளது. 

அவரது மரணம் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் , பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா முதல்வருக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்று சந்தேகம் எழுப்பி வருகிறார். உயர்நீதிமன்ற நீதிபதியே சந்தேகம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

 மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு முதல்வர் மரணத்தில் சந்தேகமில்லை என சமீபத்தில் அறிவித்தார். வைகோவும் அதே கருத்தை கூறியிருந்தார். ஆனாலும் தொண்டர்களின் ஒரு பகுதியினர் ஜெயலலிதா மரணத்தை சந்தேக கண்கொண்டே பார்க்கின்றனர்.  

அன்று என்ன நடந்தது என்பதை ஜெயலலிதா மறைந்து 2 நாட்களுக்கு பிறகு டிச 7 அன்று கவர்னர்  ஒரு கடிதம் மூலம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார். தற்போது அந்த கடிதம் வெளியாகி உள்ளது. கவர்னர் அலுவலகம் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்த கடிதம் எழுதப்பட்டு டிச.23 அன்று அது பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. 

அந்த கடிதத்தில்  முதல்வர் செல்வி.ஜெயலலிதா செப்.22 அன்று காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு சம்பந்தமாக  அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இடையில் திடீரென அவராது உடல் நிலை மோசமடைய  50 நாட்கள்  சிறந்த மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர்  உடல் நலம் தேறி , தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு கடந்த நவம்பர்  19 அன்று மாற்றப்பட்டார்.

கடந்த டிசம்பர் 4 ந்தேதி மாலை மும்பையிலிருந்த எனக்கு அந்த செய்தி கிடைத்தது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு என்ற தகவல் தான் அது. அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக எனக்கு தகவல் வந்ததை அடுத்து உடனடியாக நான் மும்பையிலிருந்து சென்னை விரைந்தேன். அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாக சென்றேன்.

அப்போலோவில் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குழும தலைவர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வருக்கு தீவிர சுவாசம் மிக முக்கியமான நுரையீரலை தூண்டி சுவாசத்தை அளிக்க முயற்சிக்கும் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர். 

தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டிச.5 நள்ளிரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மரணம் குறித்த பல்வேறு கருத்துகள் சந்தேகங்கள் ஏற்பட்டாலும் , அது தீர்க்கப்படாமல் போனாலும் அதிகார பூர்வ அறிவிப்பு என்பது மாநில கவர்னரின் அறிவிப்பு தான். 

மாநில கவர்னர் அளித்த கடிதத்தில் உடல் நலம் தேறி வந்தவர் திடீர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனளிக்காமலே மரணமடைந்ததாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.