அரசியலில் இருக்கும் தலைவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாகக் கூற மறுக்கும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்க்கை ஒரு திறந்தபுத்தகம் என்று வெளிப்படையாகக் கூறியவர்.
கடந்த 1999-ம் ஆண்டு பி.பி.சி. தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது-
உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள், மர்மங்கள் இருக்கிறேதே , அதைப்பற்றி கூற முடியுமா? என ஜெயலலிதாவிடம், பி.பி.சி. நிருபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து ஜெயலலிதா பேசுகையில், “ என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். என் வாழ்க்கை என்பது ஒரு திறந்தபுத்தகம். ஒவ்வொருவரும் எம்.ஜி.ராமச்சந்திரனை விரும்பினார்கள்.எனக்கும் கூட அவரை மிகவும் பிடிக்கும். ஆனால், சட்டரீதியான அவருடனான உறவுகளுக்கு, அதாவது அவரை திருமணம் செய்ய ஒருபோதும் விரும்பவில்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எனக்கு நானே சுயமாக ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானம் என் ஆழ்மனதில் இருந்தது.
என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் என் தாய் என்னுடன் இருக்கவில்லையே, இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பல முறை நான் யோசித்து, வருத்தப்பட்டு இருக்கிறேன். என் தாய் மட்டும் இருந்திருந்தால், எனது தனிப்பட்ட வாழ்க்கை இப்போதுள்ள நிலையைக் காட்டிலும், இன்னும் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான் எனது அடையாளம் என்பதை நான் உலகுக்கு உணர்த்த விரும்பினேன். அதனால்தான் அரசியலில் தடம்பதித்தேன். இந்திய பாரம்பரியத்தின் படி பெண்ணாக ஒருவர் பிறந்துவிட்டால், அவள் தாயாகவோ அல்லது மனைவியாகவோதான் சாக வேண்டும். இதுதான் மக்கள் மனிதில் இருக்கிறது.
ஆனால், என்னை நான் மனைவியாக ஒருவருக்கு இருந்து சாதிக்க என்னால் முடியாது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், நிச்சயமாக ஒரு “தாயாக” இருந்து எதையும் சாதிக்க முடியும் என்று எண்ணினேன். கோடிக்கணக்கான தமிழ் மக்களால் அன்பாக, “அம்மா” என்று அழைக்கப்பட்டேன்” என்று பதில் அளித்தார்.
