சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை மிக விரைவில் மாற்றப்பட உள்ளது. தற்போது தயாராகியிருக்கும் புதிய சிலைக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சம்மதம் வழங்கியுள்ளதால் எந்த நேரமும் பழைய சில அகற்றப்பட்டு புதிய சிலை நிறுவப்படலாம் என்று தெரிகிறது. இச்சிலையை ராஜ்குமார் என்ற சிற்பி சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

இதற்கு முன்னர் தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் சிலை அவரது சாயலில் இல்லை என்பதால் அது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. ‘எப்பவுமே கால்லயே விழுந்து கிடந்ததால அம்மா முகத்தைக் கூட மறந்துட்டாங்க’ என்று ‘நோட்டா’ படத்தில் வசனம் வரும் அளவுக்கு அந்த சிலை பிரசித்தி பெற்றிருந்தது. 

அதை ஏனோ உடனே மாற்ற மனமில்லாமல் இருந்த அ.தி.மு.க. தலைவர்கள் சற்று தாமதமாக ஒரிஜினல் அம்மாவின் சிலையை ஒருவழியாக வடிவமைத்து முடித்திருக்கிறார்கள். ஜெ’வின் அச்சு அசலாக வடிவாகியிருக்கும் இச்சிலையைக் கண்டு அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடுவார்கள் என்பது உறுதி.