Jayalalitha legs are toy legs! Geeta allegation

வீடியோவில் ஜெயலலிதாவின் கால்கள் பொம்மை கால்கள் போலத்தான் இருக்கிறது என்றும் இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் மறைந்த ஜெயலலிதாவின் தோழி கீதா கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த நிலையில், சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஜெயலலிதா, பழச்சாறு அருந்தும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா பழச்சாறு அருந்தியவாறு டிவி பார்த்துக் கொண்டிருப்பது வீடியோவில் வெளியாகி உள்ளது. 20 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோவை டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது.

மறைந்த ஜெயலலிதாவின் தோழி கீதா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வீடியோவில் இருப்பது ஜெயலலிதாதானா? அல்லது ரோபாவா என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நாங்கள் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வழக்கு போட்டோம். அப்போதே இந்த வீடியோவை வெளியிட்டிருக்கலாமே. அப்போது அவர் உயிருடன் இல்லையே? அன்று வெளியிடாமல் ஓராண்டு காத்திருந்து வெளியிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

ஒரு வீடியோவை வெளிநாட்டுக்கு அனுப்பி மார்பிங் செய்து, ஒரு பொம்மையை தயார் செய்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஜெயலலிதாவின் கால்கள், பொம்மை கால்கள் போலத்தான் இருக்கிறது. அசையாமல் அப்படியே இருக்கிறது. அவருடைய கைகள் ஒரே நிலையில் சென்று வருகிறது. முகத்தில் எந்த பாவனையும் இல்லை என்றார்.

ஜெயலலிதா இறந்த உடனேயே இந்த வீடியோவை வெளியிட வேண்டியதுதானே? இந்த வீடியோவை பார்த்து பாமர மக்கள் ஏமாறலாம். ஆனால் படித்தவர்கள் யாரையும் முட்டாளாக்க முடியாது. இது உண்மையான வீடியோ கிடையாது. அரசியலுக்காக தினகரன் ஸ்டண்ட் நடத்தியுள்ளார். ஜெயலலிதாவைக் கொன்றது சசிகலா குடும்பம்தான் என்பதை நிரூபிப்பேன் என்று கீதா தெரிவித்துள்ளார்.