Jayalalitha is watching the film and the fearful DMK

ஒருவரின் படத்தைப் பார்த்துக்கூட பயம் வருகிறது என்றால் அது ஜெயலலிதாவின் படம் தான் என்றும், தன் அருகில் இருந்தவர்களால் ஜெ. குற்றவாளியாக்கப்பட்டார் என்றும் ஜெ.தீவா கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம், நாளை சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜெயலலிதாவின் படத்தை, சட்டப்பேரவைத் தலைவர் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறியது.

சட்டப்பேரவையில், ஜெயலலிதாவின் படம் திறக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனோ, முன்னாள் முதலமைச்சர் என்ற பெயரில் ஜெ. படம் திறக்கலாம் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திமுகவின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், முறைகேடு செய்து சொத்து குவித்த வழக்கில் முதல் குற்றவாளி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. 

ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஜெயலலிதா உயிருடன் இல்லை. அந்த காரணத்தால்தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பது சட்டத்துக்கு விரோதமானது. குற்றவாளியின் படத்தைச் சட்டப்பேரவையில் திறக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை.

ஜெயலலிதாவின் படத்தை திறந்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக்கூடாது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டால் வரலாற்றில் அது கருப்பு நாளாக அமையும். 

மக்களாட்சி மாண்புகள் குழிதோண்டி புதைக்க சபாநாயகர் தயாராகிவிட்டார். சட்டப்பேரவை மாண்பை இழிவுபடுத்தும் வகையிலான ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்வை சபாநாயகர் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது, மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்திப்பின்போது, ஜெயலலிதா புகைப்படம் திறக்கும்போது அதில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, தனது டுவிட்டர் பக்கத்தில், படத்தைப் பார்த்துக்கூட பயம் ஏற்படுகிறது என்றால் அது மறைந்த ஜெயலலிதாவின் படமே என்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பில் இருந்து இது தெரிந்துள்ளதாகவும் தீபா கூறியுள்ளார்.

இது குறித்து ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணாக இருந்து பல சாதனைகள் செய்தவர். பல ஆண்களுக்கு மத்தியில் அரசாண்ட பெண். எதிர்கட்சிகளால் ஆட்பட்டவர். தனது எதிரி என்றாலும் தகாத வார்த்தைகளைப் ஒரு முதலமைச்சர் எப்படி ஆளுமையுடன் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டு அவர். அவரா குற்றவாளி. தன் அருகில் இருந்தவர்களால் குற்றவாளியாக்கப்பட்டார்.

ஜெ. குற்றவாளி என்று எதிரிகளால் திணிக்கப்பட்டது. உடனே கூறுவீர்கள், நீதிமன்றம் சொன்னது என்று. அதே நீதிமன்றம்தான் பல மெகா ஊழல்களில் தடயங்கள் இல்லை என்றும் கூறியது.

ஜெ. என்றும் மக்கள் முதலமைச்சர். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அம்மா என்ற சொல் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். கடைசியில் ஒன்று தெரிகிறது. படத்தை பார்த்துக்கூட பயம் வருகிறது என்றால் அவர்தான் ஜெயலலிதா. 

சிங்கம் போல அவரது உருவப்படம் சட்டப்பேரவையில் அவர் இருந்தது போல் வீற்றிருக்கும். ஜெ.வின் உருவப்படத்தை திறக்கும் அரசுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள் என்று ஜெ.தீபா டுவிட்டரில் கூறியுள்ளார்.