Jayalalitha death mystery Shocking conspiracies about her death
ஜெயலலிதாவின் மர்ம மரணம்: எல்லோரும் போலி! எல்லாமே போலி!
தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நேரமிது. அரசு அதிகாரம் கையிலிருக்கிறது எனும் மிதப்பில், ஒரு முதல்வரின் உடல்நிலைப் பற்றி அதிகார மையங்கள் அத்தனையும் மக்களிடம் கூச்ச நாச்சமில்லாமல் பொய்யை கொட்டியிருக்கின்றன. விசாரணை கமிஷன் எனும் ஒன்றை அமைத்த பிறகு ஆளாளுக்கு அடித்துப் பிடித்து ‘அன்று பொய்யை சொன்னோம்!’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது குமட்டலை தருகிறது.
ஜெயலலிதாவின் அப்பல்லோ நாட்களில், அவரது உடல் நலன் குறித்து அமைச்சர் பெருமக்களும், அப்பல்லோ நிர்வாகமும் எந்தளவுக்கு ‘ஒண்ணுமில்ல, ஒண்ணுமேயில்ல. ஜஸ்ட் காய்ச்சல்தான்! நீர்ச்சத்து குறைவாயிடுச்சுதான்! இட்லி சாப்பிடுறார்தான்!’ என்று நீட்டி முழக்கியது எல்லோரும் அறிந்ததே.
.jpg)
ஜெயலலிதா மரித்த பின் பல மாதங்கள் கழித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘மக்களே மன்னிச்சிடுங்க. உங்ககிட்ட பொய் சொன்னோம். நாங்க யாருமே அம்மாவை பார்க்கலை.’ என்று போட்டுடைத்தார். என்னதான் சீனி பொதுமேடையில் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் கூட, தேசிய அளவில் பெயர் பெற்ற ஒரு மாநில முதல்வரின் உடல் நல விஷயத்தில் அமைச்சர்களே பொய் சொல்லியதை தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சீனிவாசன் போட்டுடைத்த உண்மை விவகாரம் பல நாட்கள் பற்றி எரிந்த நிலையில் இப்போது பிரதாப் ரெட்டி அடுத்த அணுகுண்டை வீசியிருக்கிறார்.
”மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போதே ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே உண்மையை கூற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகவே மருத்துவமனை அறிக்கைகளில் உண்மைக்கு மாறான செய்திகள் இடம் பெற்றன.
.jpg)
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனிடமிருந்து தற்போது வரை எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. என் மருத்துவமனை டாக்டர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. எனக்கு சம்மன் அளித்தாலும் கவலையில்லை. அங்கே சென்று உள்ளதை சொல்வேன்.” என்றிருக்கிறார்.
பிரதாப் ரெட்டியின் இந்த திடீர் உண்மை விளம்பிக் குணம் தமிழக மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
‘சட்ட ஒழுங்கு சீர்குலையக்கூடாது எனும் பெயரில் முதல்வரின் உடல் பற்றிய எல்லா உண்மைகளையும் மறைத்திருக்கிறார்களே. மருத்துவமனைக்கு வரும்போதே ஆபத்தான நிலையென்றால், போயஸ் இல்லத்தில் அவருக்கு என்னதான் நடந்தது? இதை தெரிந்து கொள்ள இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
அன்று அம்மாவை பார்த்தோம் என சொன்ன அமைச்சர்கள் இன்று இல்லை என்கிறார்கள். அன்று காய்ச்சல் என சொன்ன அப்பல்லோ ரெட்டி இன்றோ காய்ச்சலில்லை, அபாய நிலை என்கிறார். அன்றைக்கும் இவர்களை நம்பினோம், இன்றும் இவர்களை நம்ப வேண்டிய நிலை. நாம் சொல்வதையெல்லாம் தமிழன் நம்புவான் எனும் திமிரில்தானே ‘பாதுகாப்பு’ எனும் கலரை தடவிவிட்டு வாய்க்கு வந்ததையும், தங்களுக்கு சாதகமான விஷயங்களையும் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
.jpg)
ஆஸ்பத்திரியிலிருந்த ஒரு பேஷண்ட் விஷயத்திலேயே பொய் சொன்ன ரெட்டியும், கோமாவில் ஜெயலலிதா இருந்த போதே கூச்சமில்லாமல் பொய் சொன்ன அமைச்சர்களும் இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன விஷயத்தையெல்லாம் மாற்றிக் கூறுவார்கள்?
மக்கள் நல விஷயங்களில் அமைச்சர்கள் அறிவிப்பதெல்லாம் இப்படியாக...முதலி மெய்! பிறகு பொய்! என்றுதான் ஆகுமோ? ஜெயலலிதாவின் விஷயத்தில் எல்லாம் போலி, எல்லோருமே போலி! என புலம்புகிறார்கள் மக்கள்.
