jayalalitha death mystery inquiry starts on october 25
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் வரும் 25-ம் தேதி விசாரணையை தொடங்க உள்ளதாக அக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகி தனித்து செயல்பட்ட பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த சமயத்தில், அவரைப் பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாகவும் நலமாக உள்ளார் எனவும் தெரிவித்த அமைச்சர்கள், பின்னர் அவற்றையெல்லாம் மறுத்தனர். அமைச்சர்களே முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த கருத்து வலுவானது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின.
இதையடுத்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
