முதலமைச்சா் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த பரிசுப்பொருட்கள் தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
முதலமைச்சா் செல்வி ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பதவி வகித்த போது, அவர் தன்னுடைய பிறந்த நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள காசோலைகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2011-ம் ஆண்டு, செப்டம்பர் 30-ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.பட்டுவாலியா ஆஜரானார்.
முதலமைச்சா் செல்வி ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் கவுரவ் அகர்வால், தங்கள் தரப்புக்கு மேலும் சிறிது அவகாசம் தேவை என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் ஜனவரி மாதம் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
