ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட விசாரணை ஆணையம் கடந்த 6 மாதங்களாக விரிவான விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அவரிடம் பணியாற்றியவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பலரிடமும் ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை இன்னும் முடிவடையாததால், அண்மையில் ஆணையத்திற்கு மேலும் 3 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்து வருகிறார்.

இன்று அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால் மற்றும் சாந்தாராம், ஐஓபி வங்கியின் மேலாளர் மகாலட்சுமி ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மருத்துவர் ஜெயஸ்ரீ கோபாலிடம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்ததாக வெளியிடப்பட்ட வீடியோ, மருத்துவமனையில் எடுக்கப்பட்டதுதான் என தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஐஓபி வங்கி மேலாளர் மகாலட்சுமியிடம் அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அப்போது விளக்கமளித்த அவர், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு கார் பரிசாக வாங்குவதற்காக வங்கிக்கடன் பெற்றார். அதை சசிகலா திருப்பி செலுத்திவிட்டார். அதேபோல சசிகலாவிற்கு கார் பரிசு வழங்க ஜெயலலிதா வங்கி கடன் பெற்றார். அதை அவரும் திருப்பி செலுத்திவிட்டார். அதேபோல, விவேக்கின் படிப்பிற்காக வாங்கப்பட்ட கல்விக்கடனும் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கேள்விகளை கேட்டது சங்கடமாக இருந்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.