பிரிவினைவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிடும் வகையில் நடைபெற்று வரும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்துக்குள் நுழைந்திருக்க முடியுமா என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரத யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது.

மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்துள்ள இந்த ரத யாத்திரை, ராஜபாளையம் , ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

மதவாதத்தை தூண்டிவிடுவது, பிரிவினையை உண்டாக்குவது என பல பிரச்சனைகள் இருப்பதால் இந்த ரத யாத்திரையை தடை செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிரிவினைவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிடும் வகையில் நடைபெற்று வரும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்துக்குள் நுழைந்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அத்வானியின் ரத யாத்திரை தமிழகத்துக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவித்த திருநாவுக்கரசர், ஜெயலலிதா இல்லாததாலேயே பாஜனவினர் ஆட்டம் போடுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.