ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆறுமுகசாமி ஆணையத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அப்பலோ ப்ரீதா ரெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பி.எஸ் கூறியதை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் ஒன்றே கால் ஆண்டாக ஆறுமுகசாமி ஆணையம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தொடங்கி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரை பலரையும் விசாரித்து முடித்தாகிவிட்டது.

 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது முதலமைச்சருக்கு உரிய பணிகளை கவனித்துக் கொண்ட ஓ.பி.எஸ் விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. விரைவில் அவரும் ஆணையத்தில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. அவர் ஆஜரானதும் விசாரணை முடிவடைந்து அறிக்கை தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக விசாரணை அறிக்கை தாக்கலாக வேண்டும் என்பது தான் தமிழக அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு உள்ளது என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் தான் விசாரணை ஆணையம் கோரினார் ஓ.பி.எஸ். ஆனால் தற்போது வரை முடிந்துள்ள விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக வலுவான எந்த குற்றச்சாட்டும் யாராலும் முன்வைக்கப்படவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை, எனவே தான் அவர் உயிரிழந்துவிட்டார் என்று விசாரணை அறிக்கை இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அப்படி விசாரணை அறிக்கை சமர்பிக்கப்படும் நிலையில் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லாமல் தடுத்தது யார் என்கிற கேள்வி வரும். இந்த கேள்விக்கு விடை காண சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து தான் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா வழக்கை போலீசாரின் சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். 

இந்த நிலையில் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்கிற முடிவை எடுத்தது யார்? என்கிற கேள்வி தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாகியுள்ளது. அப்பலோ மருத்துவர் ஒருவர் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று கூறியதாகவும் அதனை ஏற்க சிலர் மருத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த சிலர் யார் என்கிற கேள்வியுடன் விசாரணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அப்பலோவிற்கு எதிராக அமைச்சர் சி.வி.சண்முகம் நேரடியாக குற்றஞ்சாட்டினார். 

இந்த நிலையில் தான் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அப்பலோ மருத்துவமனையின் துணை செயல் தலைவர் ப்ரீதா ரெட்டி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ப்ரீதா ரெட்டி பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அப்பலோ மருத்துவமனையின் புதிய பிரிவு திறப்பு விழாவிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் இறுதிகட்டத்தில் ப்ரீதா ரெட்டி – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழ்ந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.