எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அதிகாரத்தை எடுத்து வெச்சுக்கிட்டு கொடுக்கும் குடைச்சலை கூட தினகரன் மறந்து விடுவார். ஆனால் ஜெயக்குமார் வைக்கும் விமர்சனங்களையெல்லாம் அவரால் ஜென்மத்துக்கும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அந்தளவுக்கு தினாவை வெச்சு செய்யும் வார்த்தைகள் அவை. 

தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார், ஜெ., மறைவுக்குப் பின் சசி தலைமையில் இறங்கியபோது ‘தர்ம யுத்த’ தலைவர் பன்னீர்செல்வத்தை பிரிச்சு மேய்ந்தபோதாகட்டும், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். இருவரும் இணைந்த பின் தினகரனை போட்டுப் புரட்டுவதாகட்டும் நின்னு விளையாடுகிறார். 

சப்பென்று அறைந்து விட்டாலும் கூட அவ்வளவு வலி தெரியாது ஆனால் ஜெயக்குமார் சொல்லும் விமர்சன வார்த்தைகள், ‘ஆட்சியும், கட்சியும் எங்க கையிலதான் இருக்குது. நீ என்ன பண்ணிடுவ? ஒண்ணும் தரமுடியாது போ!’ என்று வெகு அலட்சியமாக பேசி புறந்தள்ளுவது போல் இருப்பதுதான் பிரச்னையே. 

அ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலர் ஜெயக்குமாரிடம் இது பற்றி பேசி, கொஞ்சம் நிதானமாக வார்த்தைகளை விடுங்கள் என்று சொன்ன பின்னரும் கூட அவர் இன்னமும் கில்லியாகத்தான் நிற்கிறார். 

இந்த நிலையில் ஜெயக்குமாரிடம், அவரைப் பற்றி வரும் மீம்ஸ்களை எப்படி எடுத்துக் கொள்கிறார்? என்று கேட்டதற்கு “நான் சில மேடைகளில் தலைவரின் பாட்டைப் பாடும் வீடியோவை போட்டு, அதற்கு சம்பந்தமான பாடலையும் எடிட் பண்ணி சேர்த்து அம்சமாக மீம்ஸ் ரெடி செய்திருப்பார்கள். அதையெல்லாம் ரசிப்பேன். 

ஆனால் அநாகரிகமான, பண்பாடற்ற வார்த்தைகளை போட்டு சிலர் மீம்ஸ் தயாரிக்கிறார்கள். இவற்றை பார்த்தால் மனசு ரொம்பவே கஷ்டப்படும். அதனால் அவற்றை கண்டுகொள்வதில்லை.” என்றிருக்கிறார். 
உங்களுக்கு வந்தா ரத்தம்! தினாவுக்கு வந்தா சட்னியா?! எந்த ஊரு நியாமுங்க அமைச்சரே இது! என்கிறார்கள் விமர்சகர்கள்.