இரு கட்சிகளும் இணைய வேண்டுமானால் கட்சி நலன் கருதி தனது இலாகாக்கள் அனைத்தையும் ஒ.பி.எஸ்க்கு விட்டுகொடுக்க தயார் என நிதித்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக இரண்டாக பிளவடைந்து ஒ.பி.எஸ் அணி இ.பி.எஸ் அணி என இரு தரப்பாக உள்ளது. இந்த இரு அணிகளையும் இணைக்கும் நடவடிக்கையில் அமைச்சரவை குழு இறங்கி உள்ளது.

இதற்காக எடப்பாடி தலைமையிலும் ஒ.பி.எஸ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி குழுவில், அமைச்சர்கள், தங்கமணி, ஜெயகுமார், சிவி சண்முகம், வைத்தியலிங்கம், செங்கோட்டையன், சீனிவாசன், வீரமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், பன்னீர்செல்வம் குழுவில், கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், ஜே.சி.டி பிரபாகர், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாங்கள் திறந்த புத்தகமாக உள்ளோம். எங்கள் தரப்பிலும் ஒ.பி.எஸ் தரப்பிலும் பேச்சுவார்த்தைக்காக குழு அமைகப்பட்டுள்ளது.

தலைமைகலகத்தின் வாசல் திறந்தே உள்ளது. அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நாளை வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு வந்தால் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ஒ.பி.எஸ் அவர்கள் கேட்டால் கட்சி நலன் கருதி நிதித்துறை, நிர்வாகத்துறை பதவியை கூட ஒ.பி.எஸ்க்கு விட்டு கொடுக்க தயாராக உள்ளேன்.

அனைவரின் விருப்பமும் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தை கட்சி ஆட்சி பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதே. எனவே கட்சி அதற்கேற்றவாறு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.