எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாங்கள் விழிப்பு உணர்வுடன்தான் இருக்கிறோம்  எனவும் டி.டி.வி.தினகரனிடம் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் அதிமுக ஆட்சி கவிழும் என்று டி.டி.வி.தினகரன், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் ஆருடம் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு இன்று டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தினகரனுக்கு மலர்கொத்து வழங்கி தன்னை அவருடன் இணைத்துக் கொண்டார்.

இதைத் தொடந்து  செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, டி.டி.வி.தினகரனுக்குத்தான் மக்கள் செல்வாக்கு இருப்பதாக  தெரிவித்தார். எனவே அவருடன் இணைந்து செயல்படப் போவதாகவும் கூறிய அவர், தொகுதி மக்களுக்கு பணியாற்ற நினைக்கும் போதெல்லாம் அமைச்சர் அதற்கு முட்டுக் கட்டை போட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

சில எம்.எல்.ஏ.க்கள் விரைவில் தினகரனை சந்திக்க வருவார்கள் எனவும் தமிழகத்தை வழிநடத்த மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் செல்வதே சிறந்தது என தாம் கருதுவதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாங்கள் விழிப்பு உணர்வுடன்தான் இருக்கிறோம்  எனவும் டி.டி.வி.தினகரனிடம் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.