No one can not even shake the state government
எந்த கொம்பாதி கொம்பனாலும் தமிழக அரசை அசைத்துக்கூட பார்க்க இயலாது எனவும், 17 ஆண்டுகள் மத்தியில் மண்டியிட்டு தமிழகத்தில் ஆட்சியை நடத்திய திமுகவால் தமிழகத்திற்கு எந்தவித நலத்திட்டங்களும் கிடைக்க பெறவில்லை எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் மக்களின் போராட்டத்தை அரசு மதிப்பதில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, தமிழகத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
மக்களின் ஆதரவு இல்லாத அப்பாவி, அனாதை தலைவர்கள் தங்களை உண்மையாகவே தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பதாக பழனிச்சாமியையும் பன்னீர்செல்வத்தையும் விமர்சித்தார். மேலும் திமுக ஆட்சி கட்டிலில் அமரும் தருணத்தை மக்கள் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் எந்த கொம்பாதி கொம்பனாலும் தமிழக அரசை அசைத்துக்கூட பார்க்க இயலாது எனவும், 17 ஆண்டுகள் மத்தியில் மண்டியிட்டு தமிழகத்தில் ஆட்சியை நடத்திய திமுகவால் தமிழகத்திற்கு எந்தவித நலத்திட்டங்களும் கிடைக்க பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
திமுகவோ,அவர்களை சார்ந்தவர்களோ எங்களை பற்றி விமர்சிக்க தகுதியில்லை எனவும், மத்திய அரசோடு தற்போதைய அரசு இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு பல்வேறு நலத்தி்ட்டங்களை நிறைவேற்றி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
மத்திய அரசில் அடிமையாக இருந்தது திமுக தான் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
