சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த தொகுதியின் எம்.எல்.ஏவும் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தடல் புடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜெயக்குமார் பேச்சை கேட்க அவரது கட்சி தொண்டர்கள் மட்டும் அல்லாமல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும் திரண்டிருந்தது அ.தி.மு.கவனிருக்கே ஆச்சரியத்தை ஏற்படுததியது.

விழாவில் பேசிய ஜெயக்குமார், டி.டி.வி தினகரனை ஒரு பிடி பிடித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவை கைப்பற்ற சசிகலா குடும்பம் முயற்சி செய்தது. அ.தி.மு.கவை அவர்கள் கைப்பற்ற நினைத்தது நல்லது செய்வதற்கு அல்ல கட்சியை சுரண்டுவதற்கு. இது தெரிந்து தான் சசிகலா குடும்பத்தையே முற்றிலுமாக ஒதுக்கிவைத்துவிட்டோம். 

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே சசிகலா குடும்பத்தினர் சதி செய்தனர். சசிகலா குடும்பத்தினரின் சதி தெரிந்து தான் அவர்களை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். அதிலும் ஜெயலலிதா இருக்கும் போதே தமிழக முதலமைச்சராக திட்டம் போட்டவர் தினகரன். இதன் காரணமாகத்தான் தினகரனை ஜெயலலிதா தான் உயிரிழக்கும் வரை அருகில் கூட சேர்க்கவில்லை. ஜெயலலிதாவால் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டவர் தினகரன். நாடாளுமன்றத்திற்கு கூட தினகரன் செல்லக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

லண்டனில் ஓட்டல் வாங்கிய வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் பெயர்கள் கடைசி வரை நீக்கப்படவில்லை. ஆனால் தினகரன் பெயர் மட்டும் நீக்கப்பட்டது. இதற்கு காரணம் வழக்கு தொடர்பான சில தகவல்களை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தினகரன் வழங்கினார். இதற்கு பிரதிபலனாக தினகரன் பெயரை லண்டன் ஓட்டல் வழக்கில் இருந்து தி.மு.க நீக்கியது. 

தி.மு.க தான் நமது முதல் எதிரி என்று ஜெயலலிதா கூறுவார். அப்படிப்பட்ட தி.மு.கவுடன் உறவு வைத்துக் கொண்டு நம்மையே காட்டிக் கொடுத்தவர் தினகரன். இப்போது எங்கு பேசினாலும் தினகரன் காரணமே இல்லாமல் சிரிக்கிறார். அமைச்சர் தங்கமணி கூட லூசு தான் அப்படி சிரிக்கும் என்றார். நானும் கூறுகிறேன் தினகரன் காரணமே இல்லாமல் லூசு போல சிரித்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்.கே.நகர்  மக்கள் அவரிடம் ஏமாந்தது போல் அனைத்து தொகுதி மக்களும் ஏமாறமாட்டார்கள். மேலும் சிறைக்கு சென்றதை ஏதோ தியாகம் செய்துவிட்டு சென்றதை போல் தினகரன் பெருமையாக பேசி வருகிறார். ஆனால் திருடனுக்கும் தியாகிக்கும் வித்தியாசம் உள்ளது. திருடன் யார் என்று மக்களுக்கு தெரியும். மேலும் தினகரன் விரைவில் மீண்டும் ஜெயிலுக்கு போவார். 

சொல்லப்போனால் திகார் தினகரனுக்காக காத்திருக்கிறது. துரோகிகளும் கட்சியில் ஓரம்கட்டப்பட்டவர்களும் தினகரனுடன் சென்றுள்ளனர். உண்மையான அ.தி.மு.க நம்முடன் தான் இருக்கிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் கூட வேறு கட்சிக்கு செல்லவில்லை. இதில் இருந்தே கட்சி எந்த அளவிற்கு பலமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு நிகழ்ச்சியில் ஜெயக்குமார் பேசினார்.