பெரியார் சிலை அகற்றப்படுமா.? அண்ணாமலைக்கு தான் பின்னடைவு- தமிழகம் ஏற்றுக்கொள்ளாது- ஜெயக்குமார்
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார், கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று நினைத்த கொக்கு.. குடல் வத்தி செத்துச்சாம் என விமர்சித்தார்.
பெரியார் சிலை அகற்றம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி ஶ்ரீரங்கத்தில் நடை பயணம் மேற்கொண்டவர், பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நாள் தான், இந்து சமய அறநிலையத்துறைக்கு கடைசி நாளாக இருக்கும். பாஜக ஆட்சிக்கு வந்ததுமே, இந்து சமய அறநிலையத் துறை இருக்காது.
அதேபோல, கடவுளை நம்புகிறன் முட்டாள் என எழுதப்பட்டிருக்கும் பலகையையும், அந்த சிலையையும் நாங்கள் அகற்றுவோம் என தெரிவித்தார். அதற்கு பதிலாக நமது ஆழ்வார்களின் சிலைகளும், நாயன்மார்களின் சிலைகளும் அங்கு வைக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
ஜெயக்குமார் கண்டனம்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், மறைந்த தலைவர்களின் தலைவர் புகழ் போற்ற வேண்டும், அது தான் மான்பு, மரியாதை, தலைவர் புகழை சிதைக்கின்ற வகையில் எந்த வித கருத்தும் முக சுழிக்க வைக்கும் கருத்து தான். இது அண்ணாமலைக்கு தான் பின்னடைவு தான். கண்டிப்பாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று நினைத்த கொக்கு.. குடல் வத்தி செத்துச்சாம், முதலில் நடக்கட்டும் பார்க்கலாம் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்