உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு சார்பில் எந்தவிதமான தெளிவான பதிலும் அளிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம், இந்த மாத இறுதியுடன் நிறைவடைகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, கடந்த 13 நாட்களாக அதிமுக எம்.பிக்கள், நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நாட்டின் உயர்ந்த அமைப்பான உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு தெளிவாக இருப்பதால், அதை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்திய அரசு, கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என தமிழக அரசு நம்புவதாக தெரிவித்தார்.

மேலும், ஆந்திர மாநிலத்தின் நலனுக்காக அந்த மாநில கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நாம் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என கேள்வியும் எழுப்பினார்.

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளுக்காக, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுடனான கூட்டணியை முறித்த ஜெயலலிதா, சட்ட போராட்டங்களை நடத்தினார். ஆனால், மத்திய அரசுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த திமுக, காவிரி உரிமைக்காக எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.