இவரை மீன் வளத்துறை அமைச்சராகத்தான் நியமித்தோம், தற்போது 'அவர்' கருவாட்டு துறை அமைச்சராக மாறியிருக்கிறார் என்று  ஆடியோ குறித்த கேள்விக்கு டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் அதிரடியாக கூறியுள்ளார். 

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இளம்பெண் தொடர்பான சர்ச்சை வலையில் சிக்கியிருப்பது பற்றித் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, எம்.பி.யாக இருக்கும் ஒருவருக்கு தம்பி பாப்பா பிறந்திருப்பதாகவும், அப்படி என்றால் அப்பாவுக்கு என்ன வயசு என்று முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த 5 நாட்களாக வெற்றிவேல் குறிப்பிட்ட அமைச்சரும், சம்பந்தப்பட்ட இளம் பெண்ணின் தாயாரும் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் வெற்றிவேல் குறிப்பிட்ட அமைச்சர், சிபாரிசுக்காக வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாகவும், அதை கலைக்க அவர் முயற்சி செய்வது போலவும், கர்ப்பமான பெண்ணின் தாயார் அவரிடம் பணம் வாங்க முயற்சிப்பது போலவும் ஆடியோ வெளியாகி உள்ளது. 

 ஆடியோவில், அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் போன்று உள்ளதாகவும் எனவே அவர் தமிழக அமைச்சர் ஜெயக்குமார்தான் என்பதுபோல் பரவி வருகிறது. ஆனாலும், இதன் உண்மைத்தன்மை குறித்தும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனால், அமைச்சர் ஜெயகுமாரோ இதை முற்றிலும் மறுக்கிறார். தன் மேல் பொறாமை கொண்டுள்ள எதிர் தரப்பினர் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள் என்றும் இப்பிரச்சனை தொடர்பாக எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  இந்த ஆடியோ குறித்து டிடிவி தினகரன் பேசும்போது, ஜெயக்குமாரின் ஆடியோவை நானும் கேட்டேன். உப்பைத் தின்றவன் தண்ணி குடித்துதான் ஆக வேண்டும் என்று கூறியிருந்தார். 

ஆடியோ விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வீடியோ ஆதாரத்தையும் வெளியிட போவதாக வெற்றிவேல் தரப்பு கூறியுள்ளது. ஆடியோ விவகாரம் குறித்து தங்க தமிழ்செல்வன், இளம் பெண்ணின் படம், குழந்தை பிறப்பு சான்றிதழ், இளம் பெண்ணின் தாயாரின் குரல் உள்ளிட்ட எவிடென்ஸ் இருக்கும்போது, ஆடியோ பற்றி விசாரித்து சரியா? தவறா? என்பதை கூறியிருக்கலாம். 

அதைவிடுத்து, மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்துவது நல்லது அல்ல; இது அமைச்சருக்கு அழகல்ல; சிசிகலா இவரை, மீன் வளத்துறை அமைச்சராகத்தான் நியமித்தார். ஆனால் இன்னைக்கு கருவாட்டு துறை அமைச்சராக மாறியிருக்கார். ஆடியோவில் பதிவான குரல் தன்னுடையது அல்ல என்றும் கூறும் ஜெயக்குமார், இது என்னுடைய குழந்தை அல்ல என்று ஏன் சொல்லவில்லை என்றும் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.