உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளின் மூலம் ஆளும் அ.தி.மு.க. செமத்தியாக அப்செட்டாகியுள்ள விவகாரம் ஊரறிந்ததே. ஆனால் இதை கொஞ்சம் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கமான உற்சாகத்துடன் வலம் வர துவங்கியுள்ளனர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் போய் நின்று பேட் பிடிக்கிறார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரோ பவுலிங் பண்ணுகிறார், துணை முதல்வரோ வழக்கம்போல தன் ஆதரவாளர்களுடன் அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி அ.தி.மு.க. தரப்பு, பட்ட அடியை வெளியில் காட்டாமல் மூடி மறைக்கிறது. 

அதேவேளையில் தி.மு.க.வை போட்டுத் தாளிக்கவும் தயங்கவில்லை அவர்கள். 

வழக்கம்போல் ஸ்டாலினை வெச்சு செஞ்சு பேட்டி கொடுத்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் “ உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.  ஒன்றும் மகத்தான வெற்றியெல்லாம் பெறவில்லை. உண்மையில் அந்த கட்சியானது தேய்பிறையாக தேய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் எங்கள் கட்சி வளர்பிறையாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத்தான் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் உணர்த்தியுள்ளனர் உலகத்துக்கு. 

லோக்சபா தேர்தலில் 48 சதவீதம் ஓட்டு பெற்ற தி.மு.க.விற்கு, இப்போது உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் பதினெட்டு சதவீதமாக இருந்த எங்களின் ஓட்டு சதவீதம் இபோது ஏறுமுகமாகி அதிகரித்திருக்கிறது. இதுதான் யதார்த்தம்.

 
எதிர்வரும் சட்டசபை தேர்தலின் மூலம் மீண்டும் அ.தி.மு.க.வின் ஆட்சியே தமிழகத்தில் அமையும். இதைத்தான் உள்ளாட்சி தேர்தலின் மூலம் தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர்.” என்று கவலையே இல்லாமல் போட்டுக் கவுத்தியிருக்கிறார்.
 
அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் அறிக்கை விட்டிருக்கும் தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலின்! அதில், “ மக்களின் நம்பிக்கைக்குரியை இயக்கம் தி.மு.க. என்பதை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளன. கிராம மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிடலாம் என அடிமை ஆட்சியாளர்கள் மனப்பால் குடித்தனர். அத்துமீறல்களையும், அடக்குமுறைகளையும், அடாவடி களையும் கடந்து தி.மு.க. கூட்டணிக்கு கிராம மக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளனர். 

இருபத்து ஏழு மாவட்டங்களில், பதினான்கு மாவட்டங்களில் தி.மு.க. வெற்றியை ஈட்டியுள்ளது. மீதமுள்ள மாவட்டங்கள் பலவற்றிலும், தி.மு.க. கூட்டணியின் வெற்றியானது குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. பல இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றியை ஆளும் தரப்பு தன் அதிகார பலத்தால் தட்டிப் பறித்துள்ளது. யார் பெற்ற குழந்தைக்கோ, தான் பெயர் வைப்பது போல, நாம் பெற்ற வெற்றிகளை கூச்சமில்லாமல் தங்களுடையதாக்கிக் கொண்டுள்ளனர். 

அதிகார போதையில் வெற்றி பெற்றிவிடலாம் என பகல் கானவு கண்ட ஆளும் தரப்புக்கு வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். இன்று உள்ளாட்சி, விரைவில் நல்லாட்சி!” என்று வெளுத்துள்ளார். 
இரு பெரிய கட்சிகளின் முக்கிய நபர்களும் இப்படி மாறி மாறி திட்டி ஒரு கட்சியின் மானத்தை மற்றொருவர் வாங்கியுள்ளனர். 
ஹும்! என்று மாறுமோ எம் மாநிலத்தின் அரசியல்!