அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல் என்பதெல்லாம் சுத்த கற்பனை கதை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு தேர்தல் என்றாலே பயம்; கடைசி வரை, அவர் ஒரு தேர்தலிலும் கூட போட்டியிடப்போவதில்லை. அரசியல் என்பது சமுத்திரம் போன்றது. அதில் யார் வேண்டுமானாலும் டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கும் உரிமை உள்ளது. எனவே, நடிகர் விஷால் தண்ணீர் எடுத்து குடிக்க, நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? ஆனால், ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று, அவர் சொல்வதை ஏற்க முடியாது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, தேர்தல் பணிகளை அ.தி.மு.க. தொடங்கும்; மக்களுடன் தொடர்பே இல்லாதவர்கள் தான், இப்போதே அந்த பணிகளை தொடங்க வேண்டும்.  அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல் என்பதெல்லாம் கிடையாது. அதெல்லாம் சுத்த கற்பனைக் கதைகள். அனைவரும் ஒற்றுமையோடு தான் உள்ளனர். நிர்வாகிகள், கட்சியினரை சந்திப்பது வழக்கமான ஒன்று தான். 

இரட்டை வேடம் போடுவது, தி.மு.க.வின் இயல்பு. கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்திற்கு அமீத்ஷாவுக்கு அழைப்பு விடுத்து, காங்கிரஸுக்கு தி.மு.க. எச்சரிக்கை செய்துள்ளது. எனவே, காங்கிரஸ் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மதுசூதனன் அணியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை; ஒற்றுமையாக இருக்கிறோம் என்று ஒரே போடு போட்டு அமைச்சர் ஜெயக்குமார் நகர்ந்து சென்றார்.