டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பல உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. பிரிந்திருந்த ஒபிஎஸ்சுடன் கைகோர்த்து எடப்பாடி தரப்பில் ஒரு அணியும் சேர்ந்ததால் பிரிந்த தினகரன் தரப்பில் மறு அணியும் செயல்பட்டு வருகிறது. 

தற்போது எடப்பாடிக்கு எதிராக 21 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொறடா ராஜேந்திரன் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களை கட்சியில் இருந்து விலக்குவதாக உத்தரவிட்டார். 

இதைதொடர்ந்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

இதற்காக அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். கட்சியில் இருந்து ஒதுக்கியவர்களை எப்படி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைக்க முடியும் என டிடிவி தரப்பு கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் , ஜெயலலிதா அரசு தொடர வேண்டும் எனவும், அவரை நம்பி தான் மக்கள் அதிமுகவுக்கு வாக்கு அளித்தனர் எனவும் தெரிவித்தார். 

மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற லட்சிய மனப்பான்மையில் எம்எல்ஏக்கள் செயல்படுவதாகவும், அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் தலைமையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதில் கலந்துகொள்ளுமாறு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அனைத்து எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் கலந்து கொள்வது தான் நியாயம் எனவும் தெரிவித்தார். 

எம்எல்ஏக்களை தினகரன் அடைத்து வைத்திருப்பதை ஏற்க முடியாது எனவும், எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.