சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டிவி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செய்திகளை முன்னெடுத்து வருவருதால் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார்.  

ஜெயலலிதா காலத்தில் ஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் மனைவி அனுராதா நீண்டகாலமாக கவனித்து வந்தார். ஆனால் அடுத்து நிர்வாகம் கை மாறியது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயா டிவியை இளவரசி மகன் விவேக் கையிலெடுத்தார். இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் ஜெயா டிவி நிர்வாகத்தில் தலையிட்டு வந்தார்.

அதேபோல் நமது எம்ஜிஆர் நாளிதழும் இளவரசி குடும்பத்தின் பிடியில் இருந்தது. தினகரனுடன் இளவரசி குடும்பத்துக்கு மோதல் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் நிர்வாகங்களை கைப்பற்ற தினகரன் தரப்பு தீவிரமாக களம் இறங்கியது.

இந்நிலையில் தினகரன் மனைவி அனுராதா ஜெயா டிவி அலுவலகத்துக்கு சென்று வந்தது இளவரசி குடும்பத்தை அதிர்ச்சியடைய வைத்தது. தினகரன் குடும்பத்தின் தலையீட்டை விரும்பாத விவேக், ஜெயா டிவியின் சிஇஓ பதவியை விட்டுத்தர மறுத்து மல்லுக்கட்டி வந்தார். இந்த இழுபறியால் செய்திப் பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பின்னர் ஒரு வழியாக அந்த விவகாரங்கள் அடங்கி டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரங்கள், பேச்சுகள் அறிவிக்கைகள் என ஜெயா டிவி ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது ஜெயா டி.வி நிர்வாகம் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாக செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.

 

அதிமுகவுக்கென தொலைக்காட்சி இல்லை என்பதால் நியூஸ் ஜே தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இருப்பினும் ஜெயா டிவி எடப்பாடிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருவதை அதிமுகவினர் வரவேற்கத் தொடங்கி உள்ளனர். இதனால் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியடைந்து உள்ளார். இதன் மூலம் இளவரசி குடும்பத்திற்கும் டி.டி.வி.தினகரன் குடும்பத்திற்கும் இடையே புகைந்து கொண்டிருந்த பகை நெருப்பு இப்போது பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.