சொத்துக்குவிப்பு வழக்கை நடத்த தனி நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல்முறையீடு , பாதுகாப்பு, உள்ளிட்ட வழக்குச் செலவுக்காக ரூ. 12 கோடி தமிழகத்திடம் கேட்டுள்ளது கர்நாடக அரசு.

சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு கடந்த 2004ம் ஆண்டு மாற்றப்பட்டது. அப்போது இருந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்த வழக்கை அந்த மாநில அரசு நடத்தியது.

இறுதியில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையில், குற்றவாளிகளுக்கான சசிகலா, இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார், இருப்பினும் முதல் குற்றவாளியாகவே சேர்க்கப்பட்டார். 

கடந்த 11 ஆண்டுகளாக இந்த சொத்துக்குவிப்பு வழக்கை நடத்துவதற்காக பெங்களூரு சிவில் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உள்துறை அமைச்சகம் ஆகியவை ரூ.12.04 கோடி செலவு செய்துள்ளன. இந்த செலவுக்கான பணத்தை அளிக்கக் கோரி தமிழக அ ரசுக்கு கடிதம் எழுதியுள்ளது கர்நாடக அரசு.

அந்த மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதி, வழக்குச்செலவைக் கேட்டுள்ளார். நீதிமன்றச் செலவு, வழக்கறிஞர்களுக்கு கொடுத்த பணம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தச் ெசலவு ஆகியவை அடங்கும்.

இதன்படி, பல்வேறு துறைகளின் செலவு ரூ.3.78 கோடி, நகர சிவில் நீதிமன்றத்தின் 10 ஆண்டு செலவு ரூ.2.86 கோடி , 2004 முதல் 2016ம் ஆண்டு வரையிலான உயர்நீதிமன்றச் செலவு ரூ.4.68 கோடி, 15 ஆண்டுகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்காக ரூ.70.33 லட்சம் எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.