ஜெயலலிதா படம் போட்ட காலண்டர் அச்சிடும் ஆர்டர்கள் கேன்சல்…அதிர்ச்சியில் சிவகாசி அச்சக உரிமையாளர்கள்…

முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை அவரது புகைப்படங்களை பயன்படுத்துவதில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. ஜெயலலிதாவின் விதவிதமான படங்களை காலண்டர்கள்,வால் போஸ்டர்கள் என அளவில்லாமல் பயன்படுத்தினர்.

அ.தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் என ஏராளனோர் ஜெயலலிதாவின் படம் போட்ட 2017 ஆம் ஆண்டுக்கான காலண்டர்கள் அச்சிட சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளர்களிடம் ஆர்டர்கள் கொடுத்திருந்தனர். ஜெயலலிதாவின் படம் போட்ட இந்த காலண்டர்கள் கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டன என்றே சொல்லலாம். கோடிக்கணக்கான காலண்டர்கள் அடிக்க ஆர்டர் கிடைத்திருப்பதால் அச்சக உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

இதெல்லாம் டிசம்பர் 6 ம் தேதி வரை மட்டுமே…ஜெயலலிதா என்று மறைந்தாரோ அன்றே அவரை மறக்கத் தொடங்கி விட்டனர் கழக நிர்வாகிகள்..ஆம் ஜெ படம் போட்ட காலண்டர்களை அச்சிடுவதை உடனே நிறுத்துங்கள் என்று சிவகாசிக்குப் பறந்தன போன் கால்கள்… கொடுத்த ஆர்டர்களை மளமளவென தொடர்ந்து கேன்சல் செய்து வருகின்றனர் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அச்சக உரிமையாளர்கள் ஏற்கனவே அடித்து முடித்த காலண்டர்களை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

அதேநேரத்தில் புதிதாக ஆர்டர் கொடுக்கும் காலண்டர்களில் ஜெயலலிதாவின் படத்தை மிகச் சிறிய அளவில் மட்டுமே அச்சிட கேட்டுக் கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க. நிர்வாகிகளின் இந்த செயல்களால் அடிமட்டத் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.