இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதுடன், மத்திய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வழங்க உத்தரவிட முடியாது என்று அளித்துள்ள தீர்ப்பு பெரும் மனவேதனையை அளிக்கிறது. மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல, 27 சதவீத இட ஒதுக்கீட்டையும்கூட கொள்கை முடிவு எடுக்கும்வரை அளிக்க இயலாது என்று தெரிவிக்கபட்டிருந்ததே இந்த அக்கிரம தீர்ப்பிற்கு காரணம்.
மத்திய அரசின் இந்த சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாகத் தமிழகத்தில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடும் மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடும் மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரையில் காலவரம்பின்றி பறிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முடிவுகளை எடுத்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சமூக நீதிக்கு விரோதமான கட்சியே பாரதீய ஜனதா கட்சி என்பது இந்த விவகாரத்தில் மீண்டும் அம்பலமாகிறது. இட ஒதுக்கீட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தின் முன்னோட்டமாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது” என்று அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.