காவல்துறையின் பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகளின் அடையாளமாக தாடியை சித்தரித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான மாக் டிரில் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை சென்னை காவல்துறையால் நடத்திக்காட்டப்பட்டது.

இந்த ஒத்திகையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் மத அடையாளமாக விளக்கும் தாடியைச் செயற்கையான முறையில் ஒட்டிக்கொண்டு பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். பாதுகாப்பு ஒத்திகை என்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்த நடத்தப்பட்ட நிகழ்வில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் எனச் சாமானிய மனிதர்களின் மனதில் பதிய வைத்து முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களை வெறுக்கவும், அவர்களை பொது இடங்களில் சந்தேகப் பார்வையுடன் பார்க்கவும் இந்த ஒத்திகை உதவும்.


 
எனவே, இந்த முஸ்லிம் வெறுப்பு ஒத்திகையை நடத்திய சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா தனது அரைக்கியில் கூறியுள்ளார்.