18 எம்.எல்.ஏ’க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் ஆளுக்கொரு தீர்ப்பை முரண்பாடாக வழங்கியதில் இருந்தே தினகரன் தரப்பில் இருந்து குமுறல்கள் கேட்கத் தொங்கியிருக்கிறது.

தினகரன் தரப்பில் இருக்கும் 18 எம்.எல்.ஏ’க்களில் தங்க தமிழ்செல்வன் மற்றும் வெற்றிவேல் இரண்டு பேரும்தான் எப்போதும் லைம்லைட்டில் இருப்பார்கள். தினகரனுக்கு ஆதரவாகவும் தங்களின் குரல்களை பதிவு செய்து வருவார்கள். ஆனால் இவர்களில் தங்க தமிழ்செல்வன் ஒதுங்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

முரண்பட்ட தீர்ப்பு வந்ததும் ‘இந்த வழக்கில் இருந்தே வாபஸ் பெற போகிறேன்’ என்று அதிர்ச்சியை கொடுத்தார். அதை தொடர்ந்து தனது சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டி மக்களிடமும் கருத்து கேட்டார். இதையெல்லாம் அறிந்த தினகரன் தரப்பு ‘தினகரனின் சம்மதத்துடந்தான் இதையெல்லாம் தங்க தமிழ்செல்வன் செய்கிறார்...’ என்றது. ஆனால் நிலைமை தலைகீழாகத்தான் தெரிகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் சென்ற தினகரன் தரப்பு எம்.எல்.ஏ’க்கள் வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க கோரினர். இவர்களில் தங்க தமிழ்செல்வன் மட்டும் மிஸ்ஸிங். அவர் நீதிமன்றம் செல்லவில்லை. ஆக இருவருக்குமிடையேயான கருத்து மோதல் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

மேலும், தினகரன் பக்கமிருந்த நாஞ்சில் சம்பத் திடீரென்று கட்சியில் இருந்து விலகினார். அதற்கு அவர் சொன்ன பதில் ‘தினகரன் தொடங்கியிருக்கிற அ.ம.மு.க’வில் திராவிடர் வார்த்தை இல்லை’ என்றார். ஆனால் இந்தப் பதில் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லையென்பது அனைவருமே அறிந்ததே. இதை ஒரு காரணமாகத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். உண்மையான காரணம் தினகரனை யாரும் நெருங்க முடியவில்லையென்பதே என்கிறார்கள்.

நம்மிடம் பேசிய தேனி பகுதியை சேர்ந்த பேச்சாளர் ‘ஆரம்பத்தில் எங்களை போன்ற தலைமை கழக பேச்சாளர்கள், நிர்வாகிகள் அனைவருமே மரியாதையுடன் நடத்தப்பட்டோம். அண்ணன் வீட்டுக்கு சென்றால் கண்டிப்பாக எங்களை கவனித்துதான் அனுப்புவார். மாதம் இருபதுக்கும் குறையாமல் கூட்டங்களில் பேசி வந்தோம். ஆனால் இப்போ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்து இருபது நாட்கள் ஆகிறது. எந்தக் கூட்டங்களும் இல்லை. அண்ணனையும் பார்க்க முடியவில்லை’ என்றவரிடம் ‘இந்தப் பிரச்சனைகள் தினகரன் கவனத்துக்கு செல்லாதா?’ என்றோம்.

‘அண்ணனுக்கு ஜனார்த்தனன் என்ற செக்கரட்டரி இருக்கிறார். அவரை கடந்துதான் அண்ணனை பார்க்க முடியும். ஆனால் அதுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அண்ணனை பார்க்கவே அனுமதி தர மறுக்கிறார் ஜனார்த்தனன்’ என வேதனையுடன் சொல்லி முடித்தார் பேச்சாளர். இவர் தலைமை கழக பேசாளர் வேறு!

ஒரு தலைமை கழக பேச்சாளருக்கே இதுபோன்ற நிலைமை என்றால் கட்சியின் தொண்டர்களின் நிலைமையை கேட்க வேண்டாம். ஆனால் தினகரன் இப்போதும் கூலாகத்தான் இருப்பதாக தெரிகிறது.