இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்தன. 
இந்தியாவின் ஒரு மாநிலமாக ஜம்மு - காஷ்மீர் இருந்துவந்தது. அந்த மாநிலத்துக்கு 370 என்ற சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5 அன்று 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு - காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர், லடாக என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. புதிய அறிவிப்பின்படி இரண்டு யூனியன் பிரதேசங்களும் அக்டோபர் 31-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நள்ளிரவு 12 மணி முதல் ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இன்று முதல் யூனியன் பிரதேசங்களாக இந்த இரு பகுதிகளும் செயல்பட தொடங்குகின்றன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்துவந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முடிவுக்கு வந்ததையடுத்து அவர் கோவா மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநகராக ஜி.சி.முர்மு, லடாக் யூனியன் பிரதேச ஆளுநராக ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று பதவியேற்கிறார்கள்.


ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக வோரா இருந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். சத்யபால் மாலிக் பதவிக் காலத்திலும் விஜயகுமார் அந்தப் பதவியில் நீடித்தார். தற்போது யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டுவிட்டதால், விஜயகுமார் நேற்றோடு அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.