தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை, மிருக வதை என கூறி, பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதைதொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தாமல், தமிழர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீரி வேண்டும் என தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற்கு சில நாட்களே உள்ளது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை. மணல் கொள்ளை, கந்துவட்டி, நீர்நிலைகளை தூர்வாரததால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றார். மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினால், அதற்கு தமிழக பாஜக ஆதரவு அளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.