jallikattu prostestors wants to defeat dinakaran in rk nagar

டி.டி.வி தினகரனுடன் மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்…தோற்கடித்தே தீருவோம் என சபதம் …
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், மீனவர்களும் வாக்களிப்பதுடன் எதிர்த்து பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்த மீனவர்களின் வாக்கு மிகப் பெருமளவில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இளைஞர்கள், மற்றும் மாணவர்களின் . ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அவர்கள் சசிகலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு குளிக்கவும், பாத்ரூம் போகவும், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவி செய்தனர். சில மீனவ பெண்கள் சாப்பாடு சமைத்து அனுப்பி உதவி செய்தனர். 

அந்த போராட்டம், மிகப்பெரிய கலவரமாக மாறிய போது, சிலர் , மீனவர்களின் குடிசைகளையும், கடைகளையும் தீ வைத்து கொளுத்தினர். பல மீனவர்களை, போலீசார் கைது செய்தனர். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு, உடனடியாக அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. 

இதற்கு, முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஐ செயல்படாமல் தடுத்ததற்கு , சசிகலா தரப்பினரே காரணம் என மீனவர்களும், ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களும் நம்புகின்றனர்.

எனவே சசிகலா அணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் தினகரனுக்கு எதிராக, ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் மீனவர்கள் வாக்களிக்க உள்ளதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதே போல் மெரினா கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தினகரனுக்கு எதிராக, அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.