ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உணர்வுப்பூர்வமாக, உரிமைப் பிரச்னை என்று கருதியும் மாணவர்கள், இளைஞர்கள் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசிற்கும் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.