ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, மத்திய அரசு ஏன் சட்ட திருத்தம் கொண்டு வரவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநவுக்கரசர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிக்காத பாஜ, காங்கிரஸ் கட்சியை சீண்டி பார்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உண்மையிலேயே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென மத்திய அரசு நினைத்தால் அவசர சட்டத்தின் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தடையை நீக்குவதற்கும், அவசர சட்டம் கொண்டு வருவதற்கும் கடந்த 2 ஆண்டுகளாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை தவிர தமிழக அரசு செய்த முயற்சிகளை கூற முடியுமா? விலங்குகள் வதை தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர 50 எம்பிகளை பெற்றிருக்கும் அதிமுக எடுத்த முயற்சி என்ன?

ஏன் சட்ட திருத்தம் கொண்டு வரவில்லை. இதற்கெல்லாம் விளக்கம் கூறாமல், காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் மீது பழிபோட்டு திசைத் திருப்பி பொறுப்பை தட்டிக்கழிக்க பாஜக, அதிமுகவினர் முயற்சிக்கக் கூடாது.