அ.தி.மு.க.வினுள்ளும், அதிலிருந்து பிரிந்து வந்த வகையறா கட்சிக்குள்ளும் என்னதான் நடக்குதுன்னே தெரியலை. கிழக்க பார்க்க போய்க் கொண்டிருப்பவர்கள் திடீரென தெற்கே திரும்புகிறார்கள், வடக்கே போய்க் கொண்டிருந்தவர்கள் திடுதிப்புன்னு தென்மேற்கு நோக்கி ஓடுகிறார்கள். ஆக மொத்தத்துல ஒரே மண்டை குழப்பமாக இருக்குது. தினகரனை வெச்சு வெளுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அப்படிப்பட்டவர் சமீபத்தில் திடீரென்று ‘சசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும்!’ என்று ஒரு போடு போட, ஆடிவிட்டது அ.தி.மு.க. தலைமை. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், சசிகலாவின் தம்பியான திவாகரன் தஞ்சாவூரில் ஒரு திருமணவிழாவில் ஸ்டாலினோடு கலந்து கொண்டார். அந்த மேடையில் ’தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்ற ஸ்டாலினால் மட்டுமே முடியும். அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்’ என்று பேச, பற்றி எரிகிறது அ.தி.மு.க. வகையறா ஏரியா. 


திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தும் ஒரு தடபுடல் அரசியல்வாதிதான். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து துவக்கப்பட்ட கட்சிகளில் ஒன்றான, திவாகரனின் ‘அண்ணா திராவிடர் கழக’த்தின் மாநில இளைஞரணிச் செயலாளரான ஜெய் ஆன்ந்த், தன் அப்பா இப்படி ஸ்டாலினுக்கு சப்போர்ட் பண்ணி பேசியிருப்பது குறித்து கமெண்ட் தருகையில் “அடுத்து தி.மு.க.வோட ஆட்சி அமையப்போகுது. அதனால் எங்களோட சொத்துக்களை காப்பாற்றிக்கத்தான் எங்க அப்பா இப்படி பேசினார்னு சிலர் சொல்றாங்க. நிச்சயமா இல்லை. சொத்தைக் காப்பாற்றும் ஆசை இருந்தால் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை விழுந்து விழுந்து ஆதரிப்போமே! அப்படி செய்தால்தானே ரெய்டு, வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியுமென கணக்கு போடலாம். ஆனால் நாங்கள் அப்படியில்லாமல் பா.ஜ.க.வை எதிர்த்து அரசியல் செய்யும் தி.மு.க.வை உயர்த்திப் பிடிக்கிறோமென்றால் அதற்கு காரணம் இருக்குது. 


நாங்கள் தி.மு.க.வை தூக்கிப் பிடிக்க காரணம் அதன் திராவிட பாசம் தான். கலைஞரையும், அம்மாவையும் நாங்கள் மறைந்த மிக சிறந்த திராவிட தலைவர்களாக பார்க்கிறோம். அதனாலேயே தி.மு.க.வை போற்றினோம். திராவிட கொள்கைகளை ஒழிக்க வேண்டும் எனும் டிரெண்டை ரஜினியை வைத்து உருவாக்குகிறார்கள். இந்த சூழலில் யார் திராவிட கொள்கையை வீரியமாக முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்கு அரசியல் பாகுபாடின்றி ஆதரவு தரும் வகையில் செயல்படுவதுதான் எங்கள் கொள்கை. அதைத்தான் எங்கப்பா பண்ணியிருக்கிறார். இதில் என்ன தப்பு?” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் விசாலமாக. சொந்த தம்பி எனும் வகையில் சசியும், திவாகரனும் ஒரே ரத்தமே. திவாகரனின் மகன் எனும் வகையில் சசிகலா குடும்ப ரத்தத்தை சேர்ந்த ஜெய் ஆனந்த் இப்படி ஜெயலலிதாவின் ‘நிரந்தர எதிரி’யான தி.மு.க.வை தூக்கிப் பிடித்து பேசியிருப்பது ஜெயலலிதாவின் விசுவாசிகளை சிலிர்க்கத்தான் வெச்சிருக்குது போங்கள்!