மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
தேசிய குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. மாநிலங்களவையில் அதிமுக, பாமக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அளித்த வாக்குகள் காரணமாகவே குடியுரிமைத் திருத்த சட்டம் மசோதா வெற்றி பெற்றது. 


தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்தத் திருத்த சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் என்றும் அறிவித்துவருகிறார்கள்.


அந்த வரிசையில் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் சேர்ந்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திர அரசு எதிர்ப்பதாக அவர் தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம். சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள்  தன்னை சந்தித்து, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் ஆந்திர அரசின் நிலை என்ன என்பதைத் தெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். அவர்களிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திர அரசு ஆதரிக்காது என்று நான் கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.