Jacto jeo protest one teacher dead in chennai



பழைய ஓய்வூதயத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகராஜன் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் திடீரென மரணமடைந்துள்ளார்.

தமிழக அரசு பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட ஆசிரியர்களை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

இந்நிலையில்,அந்தப்  பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், பாபநாசம் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

தியாகராஜனின் திடீர் மரணம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுதான் இந்த மரணத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த தியாகராஜனின் உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்களுக்கு இந்த மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ – ஜியோ  அமைப்பைச் சேர்ந்தவர்கள் தியாகராஜனின் உடலை பாபநாசம் கொண்டு செல்லும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.