கொரோனா காரணத்தினால் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டு தற்போது சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் மலைப் பிரதேசம், அதிக கனமழை பொழியும் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரெயின் கோட், பூட்ஸ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா காரணத்தினால் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டு தற்போது சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மழை காரணமாக அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. 
மழை காலங்களில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு, உடல்நலக்குறைவு அதிகம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக அதிகமாக மழை பெய்யும், மலை பிரதேச மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் நீண்ட விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது கற்றலில் மிகப்பெரிய இடைவெளியையும் ஒருவித அயர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனை பரிசீலனை செய்த அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி இனி மழைக்காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் மழைக் காலங்களான நவம்பர், டிசம்பர் மாதங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அந்த நேரங்களில் விடுமுறை அளிப்பதற்குப் பதிலாக பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வரவே இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு மழைக்கோட், பூட்ஸ் வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், செருப்பு ஆகியவற்றுடன் இனி ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
