தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, வெளியூர் பேருந்துகளை 80 சதவீத அளவுக்கு இயக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின் படிப்படியாக மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை பிறப்பித்தது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழக அரசும் ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியது. நான்காம் கட்ட தளர்வில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி செப்டம்பர் 1ஆம் முதல் 35 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக செப்.7ஆம் தேதி முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது மாவட்டங்களுக்கு இடையே 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தொடர்ந்து விழாக்காலங்கள் வருவதால் பொதுமக்கள் வெளி இடங்களில் கூடுவது அதிகரித்து வருகிறது. இம்மாத இறுதியில் ஆயுதபூஜை உள்ளிட்ட விழாக்களும், அடுத்த மாதம் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால், அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே குறைந்தளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. இதனால், கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பலதரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. மேலும், கூட்ட நெரிசலில் தினமும் பணிபுரிவது தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குவதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதற்கிடையில், அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து பண்டிகை வருவதால் பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை 50 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரித்து இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல, சிட்டி பஸ் சர்வீசையும் 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசலை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறைந்தபட்சம், தீபாவளி பண்டிகை முடியும் வரையிலாவது, நூறு சதவீதம் பேருந்துகளை இயக்க வேண்டும். அப்போதுதான், பேருந்து பயணங்களில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க முடியும் என பொதுமக்கள் கூறுகின்றனர்