மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக அரசு அறிவித்து இழப்பீடு தொகையான ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று  விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரிய ஜெ.தீபாவின் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்தது. மேலும், ‘ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எங்கிருந்தீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிமன்றம் பரிந்துரை செய்தது.


இந்நிலையில் ஜெ.தீபா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  “ஜெயலலிதா சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. நான் நடத்துவது சொத்துக்கான போராட்டம் அல்ல. இது உரிமை போராட்டம். என்ன வேண்டும் என்று என்னுடைய அத்தை ஜெயலலிதா பல முறை என்னிடம் கேட்டிருக்கிறார். ஆனால், நாங்கள் அதை நிராகரித்தே வந்தோம். ஜெயலலிதா விரும்பாததால்தான் என்னால் போயஸ் கார்டன் போக முடியவில்லை என்று கிடையாது. சசிகலாவால்தான் போயஸ் கார்டனுக்கு என்னால் போக முடியவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எனக்கும் போயஸ் இல்லத்துக்கும் சம்பந்தம் இல்லாதது போல் சித்தரித்தார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால்தான் எல்லோருக்குமே தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணமே ஓ.பன்னீர் செல்வம்தான். இப்போது நான் தெய்வத்தையும், ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பியிருக்கிறேன். இதுவரை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 6 முறை ஓபிஎஸை விசாரணைக்கு அழைத்தும் அவர் ஆஜராகாதது ஏன்? நான் தேவையில்லாமல் அரசியலுக்கு வந்ததற்கு காரணமே ஓ.பன்னீர்செல்வம்தான்.” என்று ஜெ.தீபா தெரிவித்தார்.