மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவர நினைத்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் ஈஷா மையத்தில் நடைபெற உள்ள சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை சென்றுள்ளார்.

ஈஷா யோக மையம் சார்பில் நடைபெறும், ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோரும் விழாவுக்கு வருகை தர உள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கோவை மாநகரப் பகுதியில் மோனோ ரயில் சேவை கொண்டு வரப்படும். கோவை அரசு மருத்துவமனை 300 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும். மேலும், வெள்ளக் கோவில் பகுதியில் 120 கோடி மதிப்பீட்டில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

புதுக்கோட்டை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நலனே அரசுக்கு முக்கியம்.

இன்னும் 5 நாட்களுக்குள் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் 27-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அப்போது நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எடுத்துச் சொல்ல உள்ளேன்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவர நினைத்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தும்.

இவ்வாறு கூறினார்.