சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஜெ.அன்பழகன், கடந்த ஜூன் 10-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

அதேபோன்று, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலும் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசுவை நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அதேபோல், சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன், திமுக தலைமைக் கழக ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவில், ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள், ராஜா அன்பழகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார். ராஜா அன்பழகன், மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.